தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை வடபழனியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் கையெழுத்திட்டனர்.
தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் படி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகளும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் நாளைக்குள் வெளியாகும் என்று தகவல் கூறுகின்றன.