அதிமுக பொதுச்செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பாஜக உடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக பாஜக கூட்டணியின் பிரச்சார வியூகம், தொகுதி பங்கீடு, தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்தும் விவாதிக்கவும் இன்று டெல்லி சென்றார்.
தமிழ்நாடு அரசியலில் அதிமுக - திமுக இடையேயான நேரடி போரை விட அதிமுக - பாஜக இடையேயான பனிப்போர் அதிகளவில் காணப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பில் முதிர்ச்சியான அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள் பதில் சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமியும், முதிர்ச்சி என்பது அனுபவத்தினால் ஏற்படுவதில்லை என அண்ணாமலையும் மாறி மாறி நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக குற்றம் சாட்டி வருகின்றனர். அண்ணாமலை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில தலைமை அல்ல மத்தியில் உள்ளவர்கள் தான் என இபிஎஸ் பதிலடி கொடுத்தார்.
இரு கட்சிகளின் இரண்டாம் தர மூன்றாம் தர தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து கொள்ளும் நிலையில் கூட்டணி நீடிக்குமா நீடிக்காதா என்ற சந்தேகம் வலுத்து வந்தது. ஒருபக்கம் ஓபிஎஸ், ஒரு பக்கம் அவர் தொடர்ந்துள்ள வழக்குகள், ஒரு பக்கம் பாஜக, மற்றொரு புறம் திமுக என அனைத்தையும் சமாளிப்பதில் இபிஎஸ் கடும் நெருக்கடியில் உள்ளார். தேர்தல் ஆணையம் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதால் கொஞ்சம் கொஞ்சம் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் சென்றனர்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள் சந்தித்தனர். அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து நிகழ்ந்த இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இன்று துவங்கியுள்ளது என்றும் அண்ணாமலை இபிஎஸ் கருத்து மோதல் குறித்தும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரம் கூறுகிறது.
இன்று இரவு டெல்லியில் தங்க உள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை காலை பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.