என்னை அசிங்கப்படுத்தறார் அமைச்சர் என அ.தி.மு.க.வின் மாநில நிர்வாகியான முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தலைமையிடம் புலம்பியுள்ளார். துணை முதல்வர் பஞ்சாயத்து செய்தும் பிரச்சனை தீராமல், உங்களை அரசியலில் இருந்து ஒழிக்காமல் விடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஒருவர் களமிறங்க, பரபரப்பாகவே உள்ளது திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக 'தூசி' மோகனும், வடக்கு மாவட்டத்துக்குள் வரும் ஆரணி தொகுதியின் எம்.எல்.ஏவாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனும் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ஆரணி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ, வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் பாபுமுருகவேலை ஒதுக்குகிறார்கள் என்கிற குரல்கள் வருகின்றன. கடந்த வாரத்தில் ஆரணி நகரில், வடக்கு மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிக்கு நிர்வாகிகள் நியமனத்துக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த பாபுமுருகவேல், மா.செ 'தூசி' மோகனிடம், என்னை எதுக்குக் கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் அழைப்பதில்லை எனக் கேட்டுள்ளார்.
"நான் ஏன் உன்னை அழைக்கனும் என மா.செ பதில் சொல்ல. நானும் கட்சியில மாநில நிர்வாகியா இருக்கன். நீ மாநில நிர்வாகினா, அங்க நடக்கறதில் போய் கலந்துக்க, உன்னை இங்க அழைக்க முடியாது" எனக் காரசாரமாக விவாதமானது. அடுத்ததாக ஆரணி ஒ.செ சேகர், கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்டு பாபுமுருகவேல் வந்துள்ளார். அவர் வருவதைக் கேள்விப்பட்டு அந்த நிகழ்ச்சியை அமைச்சரும், மா.செவும் ரத்து செய்துள்ளனர். அதற்கு முன்பு இளைஞர் - இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த பாபுக்கு மேடையில் நாற்காலி தராமல் அவமானம் செய்தனராம்.
இதுபற்றி கட்சி முக்கியஸ்தர்களிடம் நாம் கேட்டபோது, பாபுமுருகவேலுக்கு ஆரணி பூர்வீகமாக இருந்தாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதால், சென்னையில் செட்டிலாகிவிட்டார். 2011 -இல், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக ஜெயித்து அ.தி.மு.கவுக்கு வந்தவர். தொகுதிப் பக்கம் வரமாட்டார். ஓ.பி.எஸ் சைடிலிருந்து இ.பி.எஸ் ஆதரவாளராக ஆனவருக்கு ஆரணியில் போட்டியிடும் ஆசை வந்துவிட்டது. அதனால்தான் அமைச்சரும், மா.செவும் தடுக்கிறார்கள். அதற்குக் காரணம், பாபுமுருகவேலை இயக்குவது அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், முன்னாள் மா.செவும், அமைப்புச் செயலாளருமான முக்கூர்.சுப்பிரமணி தான்.
கடந்த காலங்களில் முக்கூர் சுப்பிரமணியிடம்தான் சேவூர் ராமச்சந்திரனும் தூசி மோகனும் இருந்தனர். அரசியல் காற்று சுழற்றி அடித்ததில் இப்போது அவர்கள் கை ஓங்கிவிட்டது. 3 ஆண்டுகள் பொறுமையாக இருந்த முக்கூர் இப்போது இ.பி.எஸ்ஸிடம் நெருங்கி அமைப்புச் செயலாளராகி, மறுபடியும் அரசியலைக் கலக்க, பாபுமுருகவேலைக் கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்தபோது, முதல்வரை வரவேற்கவோ, நெருங்கவோ முக்கூர்.சுப்பிரமணியை அனுமதிக்கக் கூடாது, அப்படி நடந்தால், ஒதுங்கியுள்ள, தன்மீது அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகள் அவர் பின்னால் திரளுவார்கள் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மா.செ மோகன் இருவரும் திட்டமிட்டு, அவர் பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால் முதல்வர் அலுவலக உத்தரவுப்படி மக்கள் பிரதிநிதிகளாக இல்லாத முக்கூர் சுப்பிரமணி, பாபுமுருகவேல் இருவர் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் முதல்வருடன் அனுமதிக்கப்பட்டனர். இது அமைச்சர், மா.செ தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்கிறது அ.தி.மு.க தரப்பு.