ஊபர், ஓலா போன்ற ஆன்லைன் செயலிகளையெல்லாம் அரசே நடத்தலாம். ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “2013ல் ஒரு மீட்டருக்கு இவ்வளவு என்ற கட்டண சீரமைப்பு நடந்தது. அன்று எரிபொருளின் விலை 60 ரூபாய். இன்று 103 ரூபாய். அன்றைய கட்டண விலையிலேயே இன்றும் ஆட்டோவை ஓட்ட வேண்டும். காற்றை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வந்துவிட்டார்கள். ஊபர், ஓலா போன்ற நிறுவனங்களின் முதலாளிகள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாது.
ஆட்டோ ஓட்டுநர்கள் விமான நிலையங்களில் காத்துக்கிடந்தால் ஆன்லைன் செயலிகளை வைத்திருப்பவர்கள் வந்து பயணிகளை அழைத்துச் செல்கிறார்கள். அப்பொழுது எங்களுக்கு பிழைப்பு இல்லை. வட இந்திய தொழிலாளர்களுக்காக பேசும் பெருமக்கள் எங்கள் ஆட்களையும் பாருங்கள். எங்கள் ஆட்களுக்கும் ஐயோ பாவத்தை ஒரு தடவை சொல்லுங்கள். அதை வசதியாக மறந்துவிடுகிறீர்கள் எப்படி? இந்த ஆன்லைன் செயலிகளையெல்லாம் அரசே நடத்தலாம். ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.