அண்மையில் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'தமிழ் ஒரு சனியன்' என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் 'பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்' என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நீலாங்கரை பகுதியிலுள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் சீமானுக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.க மற்றும் திமுகவினரின் புகாரில் தமிழகத்தில் 60 இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என் பேசுகிறார்கள். ஆனால், திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரிய தலைமையுடன் நட்புடன் இருந்தார். வள்ளலார், அய்ய வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்? பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு நான் இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன். பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? பெண்ண்னுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உள்ளது. வள்ளுவர், பாரதியார் ஆகியோ பெண்ணுரிமைக்காக பேசியுள்ளனர். எனக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் பெரியாரின் தத்துவங்களை மட்டுமே பேசி ஓட்டு சேகரிக்க எந்த தலைவராவது தயாராக உள்ளனரா?
சமூக நீதி என்பது என்ன? அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிப்பது. கலைஞர் காலத்தில் அவரது வீட்டிலேயே இரண்டு அமைச்சர்கள், தற்போதும் அதே நிலைதான் தொடர்கிறது. இதுதான் சமூக நீதியா? வீட்டிற்குள் இருக்கும் சனாதனத்தை ஒழிக்காமல் வெளியே இருக்கும் சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.