காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தலைப் தேமுதிக புறக்கணிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள். இது திராவிட மாடல் இல்லை. டிஸ்ஷாஸ்டர் (DISASTER) மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை நடைபெறவிருப்பது. இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயசுக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.