தமிழ்நாடு பாஜகவில் கிளை பொறுப்புகள் முதல் மாநிலத் தலைவர் வரை உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் கிளைப்பொறுப்பாளர்களை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள், அதில் தேர்வான கிளைப் பொறுப்பாளர்கள் மண்டலத்தைத் தேர்வு செய்வார்கள், மண்டல அளவிலான தலைவர்கள் மாவட்ட தலைவர்களைத் தேர்வு செய்வார்கள். இதுதான் பாஜக கட்சியின் உட்கட்சி தேர்தல் விதியாக உள்ளது. ஆனால், அதே சமயம் மாநிலத் தலைவரைக் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும்.
மண்டல பொறுப்பாளர்களின் தேர்தல் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் மாவட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பணத்தை பெற்றுக்கொண்டு சில குற்றப்பிண்ணனி உள்ளவர்களுக்கு கட்சிக்குள் மாவட்ட பொறுப்பு கொடுப்பதாக சொந்த கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து பாஜக தலைமைக்கே புகார் சென்றுள்ளதாம்.
சென்னை மாவட்ட பொறுப்புக்கு போட்டியிட்டுள்ள ஆதித்யா நாயுடு கோகுல கிருஷ்ணன் மீது சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் எப்படி மாவட்ட பொறுப்பாளராக போட்டியிட மூடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அவரை சென்னை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க உள்ளனர் என்றும் இதனைத் தடுத்துத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.
மேலும், தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறதாம். பொதுவாக பாஜக குற்ற பின்னணி உள்ளவர்களின் கூடாரமாகத் திகழுகிறது என்று பலரும் கூறிவரும் நிலையில், தொடர்ந்து இப்படி நடந்தால் கட்சி தமிழகத்தில் நிலைத்து நிற்பது அதோகதிதான் என்று பாஜக டெல்லி தலைமைக்கே புகார் அனுப்பி இருக்கிறார்களாம். இந்த விவகாரம் சொந்த கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.