Skip to main content

“மோதுவோம் வா...” - ஐபிஎஸ் வருண்குமாருக்கு சவால் விட்ட சீமான்!

Published on 05/12/2024 | Edited on 05/12/2024
seeman criticize IPS varunkumar

நாம் தமிழர் கட்சியினருக்கும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. தன்னுடைய குடும்பத்தாரை இழிவுபடுத்தும் வகையில்  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் பதிவுகளை வெளியிட்டதாக  நடவடிக்கை எடுக்க வருண்குமார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதேபோல் ‘தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் பலர் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது உங்களுக்கு தெரியாதா?’ என்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம் என வருண்குமார் பேசினார். சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டில் வருண்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி எஸ்.பி வருண்குமார் அதில் பங்கேற்று பங்கேற்று சைபர், கிரைம் மற்றும் இணையதளம் மிரட்டல் உள்ளிட்டவற்றை குறித்து பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியினரால் தானும் தனது குடும்பமும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டோம்” என பேசியிருந்தார். 

seeman criticize IPS varunkumar

இந்த நிலையில், கோவையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் எஸ்.பி வருண்குமார் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “அவர் ரொம்ப நாளாகவே எங்களை கண்காணித்துக் கொண்டே தானே இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின்படி, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கட்சியை பதிவு செய்து 13 ஆண்டுகளாக இந்த அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறோம். 36 லட்சம் வாக்குகளை பெற்று 3வது பெரிய கட்சியாக தனித்து நின்று அங்கீகாரத்தை பெற்று இருக்கிறோம். அப்படி இருக்கும் போது, திடீரென்று பிரிவினைவாத இயக்கம், அதை கண்காணிக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். அவர் தான் நாட்டை ஆளுகிறாரா? எதை வைத்து அவர் பிரிவினைவாத இயக்கம் என்று சொல்கிறார். 

ஒரு அடிப்படை தகுதியே இல்லாமல் அவரெல்லாம் எப்படி ஐ.பி.எஸ் ஆனார்? தமிழன் என்று சொல்வதால் நான் பிரிவினைவாதி என்று சொன்னால், எதற்கு மொழிவாரியாக மாநிலத்தை பிரித்தார்கள்?. உலக மொழிகளில் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம், அந்த மொழி எங்கள் நாட்டில் இருப்பது பெருமை என்று பிரதமர் மோடி சொன்னாரே? அப்படி என்றால் அது  தமிழ் பிரிவினைவாதமா?.  முதலில் அவர் தாய் மொழி எது?  உண்மையிலேயே தமிழ்த்தாய்க்கும், தமிழ் தகப்பனுக்கு பிறந்திருந்தால் தமிழ் பிரிவினைவாதம் என்ற வார்த்தையை அவர் உச்சரிப்பாரா?. உங்களுக்கு மட்டும் தான் பொண்டாட்டி, குழந்தை குடும்பம். எங்களுக்கெல்லாம் இல்லையா?.

அவர் என் மனைவி, தாய், தந்தை, குழந்தை மற்றும் கட்சி உறுப்பினர்களை இழிவாக பேசியதற்கு அவர் வழக்கு எடுப்பாரா?. இந்த காக்கிச் சட்டையில் அவர் எத்தனை வருடம் இருப்பார்?. ஒரு 30 வருசம் இருப்பார். அதன் பிறகு, கீழே இறங்கி தானே ஆகனும். ஆனால், நான் இங்கேயே தான் இருப்பேன். அதனால் பார்த்து பேச வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் தொடக்கி வைத்த விழாவில் அவர் பேசியது மட்டும் வெளியே வருகிறதே அது எப்படி?.என் கட்சியை குறை சொல்வதற்கு தான் அவர் ஐ.பி.எஸ் ஆனாரா? மோத வேண்டும் என்று ஆகிவிட்டால் மோதுவோம் வா. உன்னால் என்ன பண்ன முடியும்?” என்று ஆவேசமாக பேசினார்.

சார்ந்த செய்திகள்