வேலூர் மாவட்டம், குடியாத்தம் (தனி) தொகுதியின் அமமுக வேட்பாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான ஜெயந்தி பத்மநாபனே மீண்டும் போட்டியிடுகிறார். இவர் மார்ச் 25-ம் தேதி காலை 10 மணியளவில் தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு நகரத்தில் வாக்கு கேட்க சென்றார். அப்போது, 18 வது வார்டில் வசிக்கும் இஸ்லாமிய பெண்மணி, ஜெயந்திக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.
வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் அங்கிருந்து சென்றதும், அந்த பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர், அந்த இஸ்லாமிய பெண்மணியின் வீட்டுக்கு சென்று, அந்த பொம்பளைக்கு நீ எப்படி ஆரத்தி எடுக்கலாம், நீங்கயெல்லாம் எங்க வேட்பாளர் கஸ்பா.மூர்த்திக்கு தான் ஓட்டுப்போடனும் என சண்டைப்போட்டவர்கள், ஒருக்கட்டத்தில் அடித்து உதைத்துள்ளனர். இதனால் அவருக்கு கை, கால் என சிலயிடங்களில் அடிப்பட்டுள்ளது. அடித்துவிட்டு அந்த அதிமுகவினர் சென்றுள்ளனர்.
அடிப்பட்ட அவர் உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அத்தெருவாசிகள் மற்றும் சில இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் ஜெயந்தி பத்மநாபன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அப்பெண்மணியிடம் நடந்ததை கேட்டு, அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளார்.
இந்த தகவல் பேரணாம்பட்டு முழுவதும் பரவி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் அதிமுகவின் மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரியவர, அமைச்சர் வீரமணி உடனடியாக அந்த பகுதி ஒன்றிய செயலாளரை அழைத்து கண்டித்துள்ளார். பிரச்சனை பெருசாகாம பார்த்துக்கனும் எனச்சொன்னதால் தற்போது அந்த பெண்ணிடமும், அவரது உறவினர்களிடமும் சமாதானம் பேசிவருகின்றனர்.
இந்த விவகாரத்தை பெருசாக்காமல் இருக்க சிலர் உள்ளே நுழைந்து அதிமுக பிரமுகர்களிடம் பண பேரம் நடத்திவருவதாகவும் சொல்லப்படுகிறது.