சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் மற்றும் ஒரு நபரை நேற்று இரவு (25-12-24) போலீசார் கைது செய்தனர் . ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் அதே வேளையில், பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க நிர்வாகி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (26-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். எனவே, இந்த வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை உடனே எடுத்துவிட்டது. இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் முதல்வருக்கோ, திமுகவுக்கோ கிடையாது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன், அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஆனால், அவர் திமுக உறுப்பினர் என்பது போலவும், மாணவர் அணியினுடைய துணை அமைப்பாளர் போலவும் பல ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. துணை முதல்வரோடும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோடும் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புகைப்படம் எடுத்திருப்பது போல் ஊடகங்கள் வெளியிடுகிறது. அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அதனை நாம் தடுக்க முடியாது. எனவே, ஞானசேகரனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லாத காரணத்தினால் தான், திறந்த புத்தகமாக உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். துரிதமாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். இது பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் போல அல்ல; அதில் முக்கிய பிரமுகரின் மகன் ஈடுபட்டிருந்தார். அதனை மூடிமறைக்க அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் கடைசியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே, அதிமுக ஒன்றும் யோக்கியமான கட்சி இல்லை. கடந்த 2022ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், பெண்களுக்கு எதிரான நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் லட்சத்துக்கு 65 என்றால், தமிழ்நாட்டில் 24 தான். எல்லா மாநிலங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தி வைத்திருப்பதே தான் சாதனை என்பதே தவிர, நாங்கள் எதுவுமே நகர்த்தவில்லை என்று கூறமுடியாது. குற்றம் செய்பவர்கள் குற்றம் செய்துகொண்டே தான் இருப்பார்கள்; அதை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது தான் எங்களுடைய கடமை. குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது எங்களுடைய கடமை.
திராவிட மாடல் அரசில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் உயர்கல்வியை சிதைத்து, பெண்களை வீட்டிலே முடக்கி வைக்கும் முயற்சியாக எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க பார்க்கிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் நடைபெற்றிருக்கின்றன. குற்றவாளியை காப்பாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வரலாம். வேறு பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் அளிக்க முன்வரலாம். பெண்ணின் பெயர் உள்ளிட்டவற்றை நாங்கள் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. விவரங்களை வெளியிட்ட பாதிக்கப்பட்ட பெண் எப்படி தைரியமாக புகார் அளித்திருப்பார். தமிழக அரசு மீது உள்ள நம்பிக்கையால் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்” என்று கூறினார்.