திருப்பத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் நேற்று (17/12/2022) நடைபெற்ற திராவிட இயக்க முன்னோடி மறைந்த ஏ.டி.கோபால் அவர்களின் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90-வது பிறந்தநாள் மற்றும் அவரின் 60 ஆண்டு கால ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியர் பணி பாராட்டு விழாவில், திமுக மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, ஏ.டி.கோபால் நினைவு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்த நாட்டிற்கே சவாலான காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நாம் எப்படி நமது கொள்கையின் அடிப்படையில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்பியுள்ளோமோ, அதேபோல் நம் கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கை கோட்பாடுகளை வைத்துக்கொண்டு அதைச் சுற்றி ஒரு அரசியலைத் தகவமைத்துக் கொண்டுள்ளார்கள். ஒரு முறை ஜெயலலிதா சொன்னார், பரம்பரை பகை என்று. அந்தப் பரம்பரை பகையின் முழு வடிவமாக அவர்கள் நின்று கொண்டுள்ளனர்.
நாம் பேசுவது சமூக நீதி. அவர்கள் பேசுவது சமூக அநீதி. நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பது, ஒரே ஒரு மாணவன் மட்டும் பள்ளியில் படித்தாலும் அந்தப் பள்ளி அங்கே நடக்க வேண்டும் என்றும், ஏனென்றால், அந்த மாணவனுக்கோ மாணவிக்கோ கல்வி மறுக்கப்படக்கூடாது என்பது தான் திராவிட மாடல் ஆட்சி; திராவிட மாடல் இயக்கம். அனைத்துப் பள்ளிகளையும் மூடிவிட்டு, ஒரு இடத்தில் பள்ளிகளைக் கொண்டுவந்து, உங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நீ வந்தால் வா. இல்லையென்றால் எப்படியும் போ என்று சொல்வது தான் அவர்களது சித்தாந்தம். அவர்கள் செய்வது ஓட்டுக்கான அரசியல் மட்டுமல்ல. அதைத் தாண்டி அவர்களது கருத்துகளை இந்த மண்ணில் விதைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள்” என்றார்.
இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் E.V.K.S.இளங்கோவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.