தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான எச்.வசந்தகுமார் சென்னையில் காலமானார்.
எச்.வசந்தகுமார் மறைவு குறித்து நம்மிடம் பேசிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,
எல்லா நேரத்திலும் காங்கிரஸ் காரராகவே இருப்பார். சில பேர் தங்களது தொழிலையும், அரசியலையும் பிரித்துப் பார்ப்பார்கள். ஆனால் அண்ணன் வசந்தகுமார் அவர்கள், வசந்த் அன் கோ விளம்பரத்தில் காமராஜர், சோனியா காந்தி படங்களை வைத்திருப்பார். அதிக கேள்விகள் கேட்க வேண்டும், தொகுதிப் பற்றி பேச வேண்டும் என்று பாராளுமன்றச் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வமாக இருப்பார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் முகத்தில் கவலை இருக்காது. உற்சாகத்துடனேயே செயல்படுவார். மிகப்பெரிய தன்னம்பிக்கையோடு, சிரித்த முகத்துடன் சுறுசுறுப்புடன் இயங்கி வந்தார். எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும், எம்.பி.யாக இருந்தபோதிலும் தனது சொந்தச் செலவில் மக்கள் பணிகளைச் செய்தவர்.
கரூர் மாவட்டத்திற்கு அவர் வந்தால் எத்தனைக் கூட்டங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றாலும் சோர்வே இல்லாமல் சிரித்த முகத்துடன் உற்சாகமாக பேசுவார். திட்டமிடாமல் திடீரென சில இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பார்கள், பரவாயில்லை பேசலாம் என்று வருவார். மிகப்பெரிய பணக்காரர் என்ற நிழல் அவர் மீது படாமல் பார்த்துக் கொண்டார். தொழில் அதிபர், சமுதாயத்தில் தான் ஒரு மதிப்புமிக்கவர் என்று இல்லாமல் மிக எளிமையாக இருப்பார். தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருந்தவர். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வெளியில் வந்து பல போராட்டங்களைச் சந்தித்து வெற்றி பெற்றவர்.
சோனியாகாந்தி குடும்பத்தினர் மீது அபரிதமான அன்பு கொண்டவர். சோனியாகாந்தி குடும்பத்தினரும் அண்ணன் வசந்தகுமார் மீது அன்போடும், மரியாதையோடும் இருப்பார்கள். என்னைப் போன்றவர்களுக்கு நல்ல சகோதரராக இருந்தவர். அவரது மறைவு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கன்னியாகுமரி மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு எனக் கலங்கினார்.