தமிழகம் முழுவதும் திமுக சார்பில், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கூட்டத்தில் அவர் பேசும்போது, "2014 ஆம் ஆண்டு பேராசிரியர் இந்தப் பகுதியில் எனக்காக வாக்கு சேகரித்தார். அவர் 9 முறை சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர். 80 ஆண்டுக்காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர். 43 ஆண்டுகள் திமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவர். 1942 ஆம் ஆண்டு கலைஞரைச் சந்தித்தது முதல் அவருடன் நட்புடன் இருந்தவர். 13 ஆண்டுகள் பேராசிரியராக வேலை பார்த்தவர். சட்டமேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். இரண்டு முறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்த ஆலமரத்தில் சிறு துளியாக நான் தற்பொழுது இங்கு உள்ளேன்.
ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளி என அரசு அறிவித்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பேராசிரியர். கலைஞர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என அறிவித்த போது நிதியமைச்சராக இருந்தவர் பேராசிரியர். தற்போது பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித்திட்டம் செயல்படுத்த 2500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு 1400 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாளை நமதே நாற்பதும் நமதே என உறுதிமொழியேற்பு கூட்டமாக இந்தக் கூட்டம் இருக்க வேண்டும். அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோர் வழியில்தான் தற்போதைய முதல்வர் செயல்பட்டு வருகிறார்" எனப் பேசினார்.
இக்கூட்டத்திற்கு கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். மேலும், தலைமைக் கழகப் பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ சேகரன் உட்பட திமுகவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.