Skip to main content

'தி.மு.க.வின் நாடகம் எடுபடாது'-ராமதாஸ் அதிருப்தி

Published on 29/09/2024 | Edited on 29/09/2024

 

DMK's play will not be accepted-Ramadoss condemned

தி.மு.க.வின் நாடகம்  எடுபடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.இராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர்  புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகங்களான வன்னியர்கள் மற்றும் பட்டியலினத்தவரின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, அந்த இரு சமூகங்களுக்கும் இழைத்து வரும் அநீதிகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன். திமுகவில் உள்ள 131 உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வன்னியர்கள். அவர்களின் எண்ணிக்கை 23, அதாவது 17.55%. அதன்படி மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 6 அமைச்சர் பதவிகள் வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது  வெறும் 3 அமைச்சர் பதவிகள் மட்டும் தான் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதேபோல், பட்டியலினத்தவருக்கும் திமுக தொடர்ந்து சமூக அநீதியையே இழைத்து வருகிறது.  திமுகவில் பட்டியலின/ பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21. வன்னியர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரும்பான்மை அவர்கள் தான். 16% கொண்ட அவர்களுக்கு 5 அமைச்சர் பதவிகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அமைச்சரவையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 3 மட்டும் தான் என்பதையும், இது சமூக அநீதி என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இந்த புள்ளிவிவரங்களும், விமர்சனங்களும் திமுகவின் சமூகநீதி முகமூடியை கிழித்து விட்டதாலோ, என்னவோ இரு சமூகங்களுக்கும் இன்னொரு பிரதிநிதித்துவத்தை திமுக வழங்கியுள்ளது. சேலம்  வடக்குத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பனைமரத்துப்பட்டி இராஜேந்திரனும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த முனைவர் கோவி. செழியனும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இதனால், வன்னியர், பட்டியலினத்தவர் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கும் போதிலும் இதுவும் கூட போதுமானதல்ல.

பட்டியலினத்தவர் அமைச்சர்களாக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன என்பதையும், அமைச்சரவையின் அதிகாரப் படிநிலையில் கடைசி இடங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டி, அவர்கள் முதன்மைத் துறைகளை வகிக்கத் தகுதியற்றவர்களா? அதிகாரப்படி நிலையில் முதல் 5 இடங்களுக்குள் வரத் தகுதியற்றவர்களா? என வினா எழுப்பியிருந்தேன். அதன் பயனாக பட்டியலினத்தைச் சேர்ந்த முனைவர் கோவி. செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்கவிருக்கிறார். 1971 கலைஞர் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக சத்தியவாணி முத்து, மின்துறை அமைச்சராக இருந்த ஓ.பி.இராமன் ஆகியோருக்குப் பிறகு முதன்மைத் துறையை நிர்வகிக்கப் போகும் முதல் பட்டியலினத்தவர் கோவி.செழியன் தான்.

அமைச்சரவையில் இத்தகைய நகாசு வேலைகளை செய்ததன் மூலம் அமைச்சரவையில் சமூகநீதியை  நிலைநாட்டி விட்டதாக திமுக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. பட்டியலினத்தவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைச்சரவையின் அதிகாரப்படிநிலையில் முதல் 3 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் முதல் 5 இடங்களிலோ பட்டியலின சகோதரரோ, சகோதரியோ எப்போது நியமிக்கப்படுகிறார்களோ அப்போது தான் அமைச்சரவையில் சமூகநீதி என்பதை பேசும் தகுதி திமுகவுக்கு வரும்.

அமைச்சரவையில் ஒருவரை சேர்ப்பதும், நீக்குவதும் முதலமைச்சரின் விருப்புரிமை என்றாலும் கூட, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான மக்களுக்கு  உரிமை உண்டு. தமக்கு நாற்காலி வழங்காத கட்சிக்காரரை அடிப்பதற்காக கல்லை எடுத்துக் கொண்டு  ஓடியது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியதற்காக கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சர் பதவியிலிருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டார். ஓராண்டுக்கு முன் தண்டிக்கப்பட்ட அவர், இப்போது எந்த அடிப்படையில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சராக்குவதற்கு சட்டப்படியாக எந்த தடையும் இல்லை; ஆனால், அவருக்கு தார்மீகத் தகுதி இல்லை. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் இருந்த போதும், துறை இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி நீடித்தார். அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி  சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதைக் காரணம் காட்டித் தான் அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தான் அவர் பதவியிலிருந்து விலகினார். சிறையிலிருந்து  பிணையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்த போதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா?

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட வழக்கை மட்டும் தான் மத்திய அரசின் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. அந்த வழக்குக்கு மூலமாக அமைந்த அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்தது தொடர்பான வழக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இயங்கும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு  தான் விசாரிக்கிறது. அந்த வழக்கை தமிழக சட்டத்துறை வழக்கறிஞர்கள் தான் நடத்துகின்றனர்.

சிறையில் இருந்து பிணையில் விடுதலையான செந்தில் பாலாஜியை ‘‘உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பாராட்டியுள்ள நிலையில் அவருக்கு கீழ் உள்ள காவல்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக எவ்வாறு வலுவான விசாரணையை நடத்தும்?

செந்தில் பாலாஜியின் பிணை குறித்து கருத்துத் தெரிவித்த சட்ட அமைச்சர் இரகுபதி,‘‘செந்தில் பாலாஜியைப் போல சட்டப் போராட்டம் நடத்தியவரை பார்க்க முடியாது. நிச்சயமாக அவர் வழக்குகளில் வெற்றி பெறுவதற்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று பெருமிதம்  தெரிவித்தார். செந்தில் பாலாஜி விடுதலையாக வாழ்த்து தெரிவிக்கும் ஒருவரின் கீழ் செயல்படும் சட்டத்துறை எவ்வாறு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நேர்மையாகவும், திறமையாகவும் நடத்தும்?

பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள இந்த வினாக்களுக்கு தமிழக முதலமைச்சர் கண்டிப்பாக விடை அளிக்க வேண்டும். முதலமைச்சரால் தியாகி என்று போற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகளை கலைப்பது உள்ளிட்ட சட்டத்தை வளைக்கும் செயல்களில்  ஈடுபடுகிறாரா? என்பதை நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் கண்காணிக்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அதை உரிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்