சி.பி.ஐ. உயர் அதிகாரிகளை மாற்றியது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் சி.பி.ஐ. அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராகுல்காந்தி அறிவித்தார்.
அதன்படி சென்னை சாஸ்திரிபவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மாநில நிர்வாகிகள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். பின்னர் கலைந்து செல்வதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது கலைந்து செல்வதாக கூறிய பின்னரும் ஏன் கைது செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் திருநாவுக்கரசர் கேட்டார். அப்போது சென்னை திருவல்லிக்கேணி துணை கமிசனர் செல்வநாகரத்தினம், திருநாவுக்கரசரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதா? வேண்டாமா? என்று தெரியாமல் போலீசாரும் தவித்தனர். அப்போது துணை கமிஷ்னர் செல்வநாகரத்தினம், நான்சென்ஸ்... மேனஸ் இல்ல... என போலீசாரை பார்த்தும், காங்கிரஸ் கட்சியினரை பார்த்தும் திட்டினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் துணை கமிஷ்னர் செல்வநாகரத்தினம் மீது கடும் கோபம் அடைந்து கொதித்தெழுந்தனர். இதனால் செல்வரத்தினம் பின்வாங்கினார். இதனால் பரபரப்பும், பதட்டமும் உருவானது. கொதித்தெழுந்த கட்சியினரை தடுத்து நிறுத்திய திருநாவுக்கரசர், கலைந்து செல்வதாக கூறிய பின்னரும் கைது நினைப்பது தவறு, உங்கள் உயரதிகாரிகளிடம் பேசுங்கள், நாங்களும் பேசுகிறோம் என துணை கமிஷ்னரிடம் கூறிவிட்டு, பின்னர் கட்சியினரை கலைந்து செல்லுமாறு கூறினார்.