அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 2023 ஆண்டில்அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சசிகலா, “40 வருடமாக இந்த கட்சியில் இருக்கிறேன். ஒரு தனிப்பட்ட முடிவுகள் மற்ற கட்சியில் எடுக்கலாம், ஆனால் எங்கள் கட்சியில் எடுக்க முடியாது. ஏனென்றால், எங்கள் கட்சியை உருவாக்கிய தலைவர்கள் அப்படி இருந்தார்கள். யார் என்ன செய்தாலும், இறுதி எஜமானர்கள் மக்கள் தான். அவர்கள் என்ன தீர்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை 2026இல் எல்லோருமே சேர்ந்து பார்ப்போம். 2026இல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பது தான் எங்களுடைய இலக்கு. தமிழக மக்களுக்காக செய்ய வேண்டிய அந்த பொறுப்பை எங்களுடைய தலைவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அதை நிறைவேற்றிக் காட்ட வேண்டிய என்பதே என்னுடைய முழு நேர பணி. இரட்டை இலை குறித்து தற்போது என்னால் பதில் கூற முடியாது. தேர்தல் ஆணையத்தின் பதிலை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதிமுகவில் அனைத்து அணிகளும் சேர்வதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது” எனக் கூறினார்.
இதையடுத்து, ‘அதிமுக, பா.ஜ.க கூட்டணி வரவில்லை என்றால் அதிமுக அழிந்துவிடும் என்று தினகரன் கூறுகிறாரே?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரும் ஒரு கருத்தை சொல்வார்கள். அதற்கு நான் எப்படி பதில் கூற முடியும். எனக்கு கிட்டத்தட்ட 40 வருட அனுபவம் இருக்கிறது. அதனால், நான் எதையும் உடனடியாக சொல்ல மாட்டேன். செய்து காட்டுவேன். எங்களுடைய தொண்டர்களின் முடிவு தான் நிலைத்து நிற்கும். அதை பார்க்க தான் போகிறீர்கள் 2026இல்” எனத் தெரிவித்தார்.