சென்னை தாம்பரத்தில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், ''தமிழகம் சிறந்த கலாச்சாரம் உடைய மாநிலம். சென்னையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவி அதற்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. இந்தியா என்ன சொல்லப் போகிறது என உலக நாடுகள் காத்துக் கிடக்கின்றன.
திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள். தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடக்கிறது. பாஜக மக்கள் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது. பிற கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க கட்சி நடத்துகின்றன. செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின் படி அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான சாடல்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்திருந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணி குறித்து மீண்டும் மறு பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்ததோடு பாஜக எங்கள் கூட்டணியில் இல்லை என்றால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தமிழகம் வந்த அமித்ஷா 25 தொகுதிகளில் பாஜக வெல்லும் என தொடங்கி வைத்த இந்த பனிப்போரை 'பாஜக அதிமுக கூட்டணி உறுதி' என முடித்து வைத்துள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.