கடந்த 2022ஆம் ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதே வேளையில், கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் மொத்தமாக இதுவரை 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், குரல் மாதிரி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் நடைபெற்று இன்றோடு (26-12-24) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வேங்கைவயல் சம்பவத்தில் திராவிட மாடல் அரசு தலைகுணிய வேண்டும். இந்த சம்பவத்த்தை விசாரிக்க சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் பட்டியலின மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கில், காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன” என்று கூறினார்.