14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைத்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. போட்டியிடும் கட்சிகளுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்தது.
அதன்படி 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், உரிய ஆவணங்கள் இன்றி 10 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் உரிய அனுமதி பெற்ற பின்பே தேர்தல் பணிமனைகள், பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் பணிமனைகள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார்.
இதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் திமுகவினர் 10 இடங்களிலும் அதிமுகவினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் பணிமனைகளைத் திறந்து இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து தேர்தல் அதிகாரிகள் நேற்று காலை முதல் ஒவ்வொரு தேர்தல் பணிமனைகளுக்குச் சென்று சீல் வைத்தனர். மேலும் அனுமதி இன்றி பணிமனைகளைத் திறந்த கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.