கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் விதமாக வீடியோ வெளியிட்டதாக 'கருப்பர் கூட்டம்' மீது பாஜகவினர் புகார் கூறிய நேரத்தில் ஒருசேர வந்த சட்டமன்றத் தேர்தலுக்கு வலுசேர்க்க தொடங்கப்பட்டது பாஜகவின் 'வேல் யாத்திரை'. அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், இந்த வேல் யாத்திரையை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் எல். முருகன், மற்றொரு யாத்திரையைத் தொடங்கி நடத்திவருகிறார். அதற்கு 'மக்கள் ஆசி யாத்திரை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் பாஜகவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அதற்காக மக்களைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதுவே இந்த யாத்திரையின் நோக்கம் என பாஜக தரப்பில் கூறப்பட்டாலும், அரசியல் நோக்கர்களின் பார்வையில், பாஜகவினரை இப்போதிருந்தே தேர்தலுக்கு உற்சாகப்படுத்தவே இந்த யாத்திரை என்று கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தற்போதே ரெடியாக இருக்கிறோம் என்பதைப் போல் காட்டிக்கொள்ள பாஜக யாத்திரை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய பாஜக, நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. அந்த நால்வரில் இருவர் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே 'கொங்கு நாடு' என்ற வாதத்தை எழுப்பி அது நிலைக்காமல் போன நிலையில், கொங்கு பகுதியில் கட்சியைப் பலமாக்க கொங்கு மண்டலத்தில் மட்டும் இந்த மக்கள் ஆசி யாத்திரை நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவிவருகிறது.