ஜெயலலிதாவின் மறைவையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. அதன் பிறகு பொதுக்குழு கூட்டப்பட்டு அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிவகங்கையில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் காலை முதலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, “அண்ணாமலை போல் அதிகமான ஐபிஎஸ் ஆபிசர்களுடன் பழகியவன் நான். ஆனால் உங்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. உங்களுக்கு மனநிலை சம்பந்தமாக அதிகமான பிரச்சனை இருக்கிறது என சொல்கிறார்கள். அதையெல்லாம் உறுதிப்படுத்துவது போல் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அவரது தாய் மற்றும் மனைவியும் ஜெயலலிதாவை விட பல மடங்கு உயர்ந்தவர் என சொல்கிறார். யார் இதையெல்லாம் உங்களிடம் கேட்டது.
அண்ணாமலைக்கு தெரியாது, கர்நாடகத்தில் கோபால் என்ற ஐபிஎஸ் ஆபீசர் இருந்தார். இப்பொழுது ஓய்வில் உள்ளார். சீனியர் ஐபிஎஸ் ஆபீசர். வீரப்பன் சுட்ட பொழுது 3 குண்டுகள் கழுத்தில் போய்விட்டது. அப்பொழுது சுய நினைவை இழந்துவிட்டார். கோவைக்கு கொண்டு வந்தார்கள். அப்பொழுது ஜெயலலிதா மருத்துவர்களை தொடர்பு கொண்டு என்ன ஆனாலும் விடாதீர்கள் கோபால் உயிர் பிழைக்க வேண்டும் என்று சொல்கிறார். கோபால் இன்று நல்லபடியாக உள்ளார். உங்களுக்கு தெரியுமா உங்களை தலைவராக ஆக்கிய அமித்ஷா தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதாவிற்கு மாலை போட்டு மரியாதை செய்த பின் ஓபிஎஸ்ஸை பார்த்து எவ்வளவு பெரிய தலைவி என சொன்னார். எடியூரப்பா, ஜெயலலிதா இறந்த பின் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்து இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தார். அடுத்து இந்நாட்டின் பிரதமர் மோடி. போயஸ் தோட்டத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தார். இம்மாதிரி நூற்றுக்கணக்கான விசயங்களை சொல்ல முடியும். நீ அரைவேக்காடு. இங்கு சீண்டினால் யார் தடுத்தாலும் ஒன்றும் நடக்காது. மிக பக்குவமாக பேச வேண்டும். உனக்கு வயதும் அனுபவமும் போதவில்லை என ஏற்கனவே சொல்லியுள்ளேன்.
ஜெயலலிதாவை பேசிவிட்டு வெளியில் நடமாட கூட முடியாது. அந்த மாதிரியான நிலை ஏற்பட்டு விடும். நீங்கள் ஜெயலலிதாவை தவறாக பேசிய செய்தி கர்நாடகாவிற்கு சென்றால் அங்கு பாஜக தோற்றுவிடும். ஒரு தமிழர் வாக்களிக்க மாட்டார்கள். உங்களுக்கு எதாவது செக் செய்ய வேண்டும் என்றால் கீழ்பாக்கத்தில் சென்று செக் செய்து கொள்ளுங்கள்” எனக் கூறினார்.