கடந்தகால அவமானங்களைத் துடைத்தெறியவே காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருப்பதாக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் திடீர்த் திருப்பமாக தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு மும்முனைப் போட்டி நிலவிவந்த நிலையில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவடைதற்கு முன்னதாகவே தோல்வியை உணர்ந்த காங்கிரஸ் ம.த.ஜ.விற்கு ஆதரவளித்தது. இதனால், 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற பா.ஜ.க. ஆட்சியமைக்கும் வாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம்பேசி வலைவிரிப்பதாக குற்றம்சாட்டினார். பா.ஜ.க.வினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்களா என்ற கேள்வியை முன்வைத்தபோது, காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்திருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பில் இருந்தும் எனக்கு கூட்டணி வாய்ப்புக்கான அழைப்பு வந்தது. இதை வெறுமனே உளறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 2004 மற்றும் 2005ஆம் ஆண்டு நான் எடுத்த தவறான முடிவினால் என் தந்தையின் அரசியல் வாழ்க்கையில் கறுப்புப்புள்ளி ஏற்பட்டது. மக்களும், கடவுளும் அந்தக் கறுப்புப்புள்ளியை துடைத்தெறியும் வாய்ப்பைத் தந்திருக்கின்றனர். அதற்காகவே நான் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
2004 - 05 காலகட்டத்தில் தனது தந்தையின் வார்த்தைகளையும் மீறி, குமாரசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். இதனால், ம.ஜ.த. என்ற கட்சியே இரண்டாக பிளவுபட்டது. மதச்சார்பற்ற கட்சியான ம.ஜ.த. ஒரு மதவாத கட்சியுடன் கூட்டணி வைப்பதா என பலரும் விமர்சித்தனர். இத்தனை விமர்சனங்களும் குமாரசாமியின் தந்தை தேவகவுடாவை மனமுடையச் செய்தன. தற்போது அதைத் துடைத்தெறிவதாக குமாரசாமி குறிப்பிட்டிருக்கிறார்.