கரூரில் நெடுஞ்சாலைகளில் போடாத சாலைகளுக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு கொடுத்ததோடு, 5 முறை தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக பேட்டியளித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்திருந்தார். இன்று கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகார் மனு வழங்கி முறையிட்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புகார் அளிக்கப்பட்டுள்ள சாலையில் வேலையை நிறுத்திவிட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நெடுஞ்சாலை துறையில் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் நெடுஞ்சாலை துறையில் நடைபெறும் ஊழல் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். 5 முறை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் சாலைகள் மட்டும் போட்டு வருகின்றனர். போடாத சாலைக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் பேச வலியுறுத்தி உள்ளோம்.
திமுகவைச் சேர்ந்த 'சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா' என்ற ஒப்பந்ததாரர் நிறுவனம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. அந்த ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கரூர் மாவட்டத்தில் டெண்டர் விடப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக இனிமேலும் யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. விரைவில் ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க இருக்கிறோம். இந்த புகார் மீது நீதிமன்றத்தில் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
நேற்று நள்ளிரவு கோடாங்கிபட்டி அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 'சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா' ஒப்பந்ததாரருக்கு சொந்தமான டிப்பர் லாரி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த எங்களது நிர்வாகிகளை குற்றவாளிகளாக மாற்றி, வழக்கு பதிய உள்ளனர். ஆனால், அந்த டிப்பர் லாரியை அவர்களாகவே தீ வைத்து எரித்து விட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று தெரிவித்தார்.