அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. அண்மைக் காலமாக பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்துவருகிறது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்ந்து நீடிக்குமா? என்கிற சந்தேகம் அ.தி.மு.க. - பா.ம.க. சீனியர்களிடமே எதிரொலித்தபடி இருந்தது. இந்த நிலையில், வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டங்களை நடத்தினார் டாக்டர் ராமதாஸ். இது, அ.தி.மு.க.வுக்கு மேலும் பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதேசமயம், இட ஒதுக்கீடு போராட்டத்தில் பா.ம.க.வினர் ஏற்படுத்திய சட்ட ஒழுங்கு பிரச்சனை, கடுமையான விமர்சனத்தையும், தமிழகத்தில் காவல்துறையினர் இருக்கிறார்களா என்கிற கேள்வியையும் எழுப்பியது. இதனால், டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்பட பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் என 856 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தமிழக அரசின் காவல்துறை. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே, இட ஒதுக்கீடு போராட்டங்களின்போது, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்திய பா.ம.க. கட்சியைத் தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் வாராகி வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த மனு மீதான விசாரணை விரைவில் வரவிருக்கிறது. இந்த நிலையில்தான், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தி தமிழகத்தின் சட்ட ஒழுங்கிற்கு நேரடியாகச் சவால் விடுகிற தொணியில் நடந்து கொண்ட பா.ம.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்தும் ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை என அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பத்திரிகையாளர் வாராகி தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையின்போது, இத்தகைய கேள்விகளை கோர்ட்டில் அவரது தரப்பில் முன் வைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. அப்போது, அரசை நோக்கி நீதிமன்றமும் இத்தகைய கேள்வியை எழுப்பக் கூடும் என அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் அரசுக்குத் தெரிவித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.