தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராமம், நகரம், மாநகராட்சி என அனைத்து நிலைகளிலும் மறு சீரமைத்து கட்சியை பலப்படுத்தும் நோக்கோடு சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி என 3 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் 3 பேரில் ஒருவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் நியமித்துள்ளனர். இது குறித்து ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் மேலவீதியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் ரங்க பூபதி, மாவட்ட தலைவர் செந்தில்நாதன், மாநிலச் செயலாளர்கள் சித்தார்த்தன், ஜெயச்சந்திரன் நகரத் தலைவர் தில்லை ஆர். மக்கீன், மாநில நிர்வாகி ஜெமினிராதா உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் குறித்து வைக்கப்பட்ட பேனரில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் படம் மட்டும் இல்லாமல் மற்ற சமூகத்தினர் படம் இருந்துள்ளது. இதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கேட்டபோது கூச்சல் ஏற்பட, அப்போது ஆத்திரமடைந்த பட்டியல் சமூகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் அங்கிருந்த பேனரை கிழித்து எரிந்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு இரு தரப்பினருக்கும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான கஜேந்திரன் கூறுகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரில் ஒருவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள். மற்ற சமூகத்தினரை படத்துடன் பேனரில் அச்சடித்து உள்ளனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தினர் ஒருவர் படங்களை போடாமல் புறக்கணித்துள்ளனர். இது குறித்து கேட்டால் தகவல் இல்லை என்கிறார்கள். பின்னர் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, ஜனவரி 22ஆம் தேதி நியமித்த கடிதத்தைக் காண்பித்தோம். காங்கிரஸ் கட்சியில் பெரும் அளவில் பட்டியல் சமூக மக்கள் உள்ளனர். இதுபோன்ற சாதிய அடக்குமுறையை மேற்கொண்டால் தற்போது கட்சியில் உள்ளவர்களும் வெளியே சென்று விடுவார்கள். இதற்கு மாநிலத் தலைமை சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியின் சிதம்பரம் நகர தலைவர் மக்கீன் கூறுகையில், கடைசி நேரத்தில் இந்த 3 பேரை அறிவித்துள்ளனர். அதற்கு முன்பே பேனர் அடித்து விட்டோம். அதனால் அவர்கள் படம் இடம் பெறவில்லை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்று அனைவரையும் சமாதானம் செய்து வைத்துட்டோம் என்கிறார்.
காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேனரை கிழித்து கூச்சலில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.