




சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இதைத் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ‘Grand Western Trunk Road’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கம் அளித்த நெடுஞ்சாலைத்துறை, ‘சென்னை கிராண்ட் வெர்ஸ்டன் டிரங்க் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அது ஈ.வெ.ரா சாலை என அழைக்கப்படுவதுண்டு. தமிழக அரசின் ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் சாலை என்றுதான் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (15.04.2021) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை, பெரம்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் கலந்துகொண்டார். மேலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்துகொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.