பட்ஜெட் தயாரிப்பு இறுதியடைந்துள்ளதைக் குறிக்கும் வகையில் அல்வா கிண்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
அடுத்த மாதம் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.
இந்நிலையில் பட்ஜெட் தயாரித்ததற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் அல்வா தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, கடாயில் உள்ள அல்வாவினைக் கிளறி பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்ட சக அமைச்சக பணியாளர்களுக்குப் பரிமாறினார். நாடாளுமன்றத்தில் உள்ள நார்த் பிளாக்கில் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த அல்வா கிண்டும் பணிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.