திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஏ.ஆர். பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (42). அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று (09.08.2021) பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் தெரிவித்திருப்பதாவது, “நான் கடந்த 20 ஆண்டுகளாக கால்நடைத்துறை முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணனிடம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்துவந்தேன். கடந்த 2018ஆம் ஆண்டு கால்நடைத்துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய சுற்றறிக்கை வந்தது.
இந்த வேலைக்கு உனக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் சிபாரிசு செய், வாங்கித் தருகிறேன் என்று உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கூறினார். அதன்படி எனக்குத் தெரிந்தவர்கள் பலரிடம் இந்த வேலைக்காக ஐந்து லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து ஒன்றரை கோடியை உடுமலை கே. ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தேன். அவர் அந்தப் பணத்தை அவரது பினாமியாக செயல்பட்ட டி. ரமேஷ் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். நானும் அந்தப் பணத்தை ரமேஷிடம் கொடுத்தேன். இதற்கிடையில் கோர்ட் உத்தரவுப்படி கால்நடைத்துறையில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் வேலைக்கு ஆள் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதனால் வேலைக்குப் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் திருப்பிக் கேட்டனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நான் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டப்போது, உடுமலை கே. ராதாகிருஷ்ணன் என்னை வெளியில் அனுப்பிவிட்டார். ‘உன்னை யார் என்றே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார். அவரது பினாமியான ரமேஷிடம் பணத்தைக் கேட்டபோது, அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். நான் இந்த விஷயத்தில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை. வசூலித்த பணத்தை அப்படியே ரமேஷிடம் கொடுத்துவிட்டேன். இது தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணன், அவரது பினாமி ரமேஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.