கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கரோனா விவகாரத்தில் அரசுக்குத் துணையாக அனைத்து கட்சிகளும் செயல்படுவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் கரோனாவால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யமாட்டார் என நம்புவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். மேலும் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தைக் கரோனா சிகிச்சையளிக்க பயன்படுத்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் கொடுக்க முன்வந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.