Skip to main content

"10.5% உள் இடஒதுக்கீடு ரத்துக்கு அதிமுகதான் காரணம்" - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு 

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

durai murugan

 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது” எனத் தீர்ப்பளித்து தமிழ்நாடு அரசின் வன்னியருக்கான இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தமிழக அரசு தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு இந்த வழக்கில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாக தெரிவித்த துரைமுருகன், அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அதிமுக ஆட்சியில் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதே தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் எனக் குற்றம்சாட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

“கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை” - அமைச்சர் துரைமுருகன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Minister Duraimurugan says We are not concerned about Karnataka talking about mekadatu dam

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இந்த நிலையில், விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று (16-02-24) கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். 

இதையடுத்து பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது” என்று கூறினார். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (17-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், சித்தராமையா கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடகா அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது. கர்நாடகா நிதியை ஒதுக்கலாம், குழுவை அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதியின்றி அணை கட்ட முடியாது. மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதனால், எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம் அதுதான் நியதி” என்று கூறினார்.