மாநில அளவிலான நிர்வாகிகளுடன் கலந்துரையாட பிப்ரவரி 21 அல்லது 25 ஆகிய தேதிகளில் திருச்சியில் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகவும் சோர்வுற்று இருக்கக் கூடிய கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என அனைவரையும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அடுத்த மாதம் திருச்சி சிறுகனூரில் ஒரு மாபெரும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் வட்டச்செயலாளர் ஆரம்பித்து தலைமைக் கழகம் வரை இருக்கக்கூடிய அனைத்து பொறுப்பாளர்களையும் அழைத்து ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
எனவே அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த சிறுகனூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 200 ஏக்கர் நில பரப்பளவை வாடகைக்கு பெறப்பட்டு, நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, கட்சியின் முதன்மைச் செயலாளர் நேரு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மண்டலம் உள்ளிட்ட நிர்வாகிகளோடு ஆய்வு செய்தார்.
மேலும், நாளை (19.01.2021) நாமக்கலில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மாலை விராலிமலை பகுதியில் நடைபெறக்கூடிய கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் மாநில அளவிலான இந்த கலந்துரையாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகனூர் பகுதியில் உள்ள அந்த இடத்தைப் பார்வையிட்டு, ஆயத்த பணிகள் குறித்து விழா ஏற்பாட்டாளர்களோடு மு.க.ஸ்டாலின் கலந்துரையாடவுள்ளார்.