நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் இல்லத்திற்கு வந்தார் அமைச்சர் உதயநிதி. அமைச்சராக பொறுப்பேற்ற பின் கலைஞரின் இல்லத்திற்கு முதன்முறையாக வந்த உதயநிதிக்கு திமுக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளை இல்லத்தில் கலைஞர், அவரது பெற்றோர் மற்றும் முரசொலி மாறன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.
கசந்த ஆட்சியில் விடியலை நோக்கி பிரச்சாரத்தின் போது இதே கலைஞரின் இல்லம் முன்பு கைதானதை உதயநிதி நினைவு கூர்ந்தார். முன்னதாக அங்குள்ள நினைவகத்தில் குறிப்பும் எழுதினார். அதில், “2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் 2020 நவம்பர் 20 ஆம் தேதி தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராகி முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம்” என எழுதியுள்ளார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சராக பொறுப்பேற்று முதன் முறை வந்துள்ளேன். கலைஞர் வழியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வழியிலும் மக்கள் பணியாற்றுவேன். கட்சியினரும் பொதுமக்களும் அனைத்து இடங்களிலும் வரவேற்பு கொடுக்கிறார்கள். மனுக்களை கொடுக்கிறார்கள். குறைகளை சொல்கிறார்கள். திமுக ஆட்சியில் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமென்றும் முதலமைச்சர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதற்காக உழைத்துக்கொண்டுள்ளோம்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி, “முத்தமிழறிஞர் பிறந்த திருக்குவளை இல்லம் சென்று கலைஞர், முரசொலி மாறன் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை செய்தோம். 2021 தேர்தல் பிரச்சாரத்தை இதே திருக்குவளையில் தொடங்கி கைதானோம், இன்று அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக வருவதை எண்ணி மகிழ்கிறேன். கலைஞர் வழியில் மக்கள் பணியாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.