இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாண், ஆந்திரா சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அதன் அடிப்படையில் இவர் கடந்த இரண்டு வாரங்களாக ‘வாராகி யாத்திரா’ என்ற பெயரில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள பல இடங்களுக்குச் சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் அந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது பொதுக் கூட்டங்களுக்கு அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். அதில், பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை பின்னுக்குத் தள்ளி பவன் கல்யாண் முன்னிலை பெற வாய்ப்பு அதிகளவு உள்ளதாக பவன் கல்யாண் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியிருக்கிறார். அதில் அவர், “பவன் கல்யாண் ஒரு நடிகர். நடிகர் என்ற ரீதியில் அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் வருகிறது. இந்த கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறிவிடும் என்று பவன் கல்யாண் நினைத்துவிடக்கூடாது. நானும் தான் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். எனக்கும் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. வேண்டுமென்றால் ஒரு சவால் விடுகிறேன். ஏதாவது ஒரு ஊரில் தனித்தனியாக கூட்டம் நடத்தலாம். நானும் வருகிறேன். பவன் கல்யாணும் வரட்டும். யாரை பார்க்க அதிகளவு ரசிகர்கள் வருகிறார்கள் என்பதை பார்த்து விடலாம். அவரை விட எனக்குத் தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர்” என்று கூறினார்.