சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.
இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (30-12-24) அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசுக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து, மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? யார் அந்த சார்? என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “யார் அந்த சார்? என அதிமுக கேள்வி எழுப்புகிறது; அந்த சார் நாங்கள் இல்லை. யார் அந்த சார்? என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அதிமுகவின் போராட்டம் வீண் வேஷம். நாங்கள் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ள அதிமுக கபட நாடகம் ஆடுகிறது. அதிமுக ஆட்சி குறித்து விவரிக்க பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும். மற்ற மாநில பெண்களின் நிலைமை குறித்து விஜய் போய் பார்த்துவிட்டு வரட்டும். பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று விஜய் பார்த்துவிட்டு வந்து கூறட்டும்” எனக் கூறினார்.