குடிநீர் கேட்டு அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சற்றும் அதை எதிர்பார்க்காத அமைச்சர் சற்று நேரம் மக்களின் ஆவேச அர்ச்சனையை கேட்டு ஆடிப்போனார்.
நாகை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே உள்ள சின்னங்குடி கிராமத்தில் உள்ள சுனாமி குடியிருப்பில் 200-க்கும் அதிகமான மீனவ மக்கள் வழ்ந்து வருகின்றனர். அந்த பகுதி கடற்கரை ஓரமுள்ள பகுதியென்னபதால் நிலத்தடி நீர் உப்பாகி தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. அந்த கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுக்குடிநீரும் முறையாக வராததால் நான்கு கிலோமீட்டர் வந்து தண்ணீர் பிடித்துச்செல்லும் அவலம் நீடித்துவருகிறது. தண்ணீர் பஞ்சத்தை போக்கிட அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், அமைச்சர், எம்,எல்,ஏ உள்ளிட்ட பல தரப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் மனுக்கொடுத்தும் தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அப்பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிட காரணம்.
இந்தநிலையில் சின்னங்குடியில் அரசுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கப்பதற்கு வந்திருப்பதாக செய்தியறிந்த அப்பகுதிமக்கள், நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பி வருகையில் அமைச்சர் ஓ,எஸ்,மணியன் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சரோடு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் பாரதி மோகன், நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் பவுன்ராஜ் உள்ளிட்டவர்களின் வாகனங்களையும் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறித்து, தண்ணீர் வழங்குமாறு கோஷம் எழுப்பினர்.
நீண்டநேர மறியலுக்கு பிறகு அதிகாரிகள் மக்களிடம் மன்றாடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.