தமிழகத்தில் பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் வருகை தந்து கூட்டம் நடத்தும் போதெல்லாம் மாநிலம் முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகளுக்கு முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டு வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த வாகனத்தில் வருகிறார்கள் என்றும் வாகன எண் உள்ளிட்ட அனைத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் புதனன்று சென்னையில் நடைபெறும் கூட்டனி கட்சியினரின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர்களை வாகன வசதி ஏற்பாடு செய்து அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாஜக கட்சியினருக்கு கட்சியின் தலைமையில் இருந்து எந்தவித அழைப்பும் கொடுக்கப்படவில்லை. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள், பாராளுமன்ற பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பாஜக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்கள் தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதன் முதலாக தமிழகத்தில் கூட்டணி கட்சி சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பாஜகவினருக்கு அழைப்பு விடுக்காமல் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்களை கூட்டியிருப்பது பாஜக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கின்ற எங்கள் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் பிரச்சாரக் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைமை அழைப்பு விடுக்காமல் விட்டுள்ளது தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியான தாங்கள் கூட்டணி கட்சியுடன் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று அக்கட்சியின் தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''தமிழக பாஜக மோடி வருகின்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் பாராளுமன்ற நிர்வாகிகள் மாவட்டத் தலைவர்களை அழைத்து இருக்க வேண்டும். ஆனால் தலைமை இதுபோன்ற தவறான முடிவு எடுத்திருப்பது தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது என்கிறார். மேலும் இதுகுறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்'' என்றார்.