கலைஞர் மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ எடப்பாடி ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான் நான்காண்டு காலம் சிறந்த ஆட்சியை வழங்கியுள்ளேன். வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக உள்ளது. புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக சேலம் கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. தற்போது விவசாய பணிகள் மேற்கொள்ளும் காலம். ஆனாலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்கவில்லை. தேர்தல் காலத்தில் அறிவித்த திட்டங்களில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, உயர் கல்வித் துறை போன்ற துறைகளில் இந்திய அளவில் பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றது. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழக முதன்மையாக விளங்கியது.
திமுக அரசை அகற்ற நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தாராளமாக உள்ளது. உதயநிதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி சிறந்த அமைச்சராக வந்துள்ளார் என்றால் மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவில்லையா? என கேள்வி எழுப்பினர். கலைஞரின் அடையாளத்தில் தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் கிட்டும். ஆனால் அதிமுக அதுபோன்று இல்லாமல் அடிமட்ட தொண்டனுக்கும் பதவி கிட்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாவது காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. பொதுமக்கள் மீது கடன் சுமையை சுமத்தியதுதான் திமுகவின் சாதனை. கடன் மேல் கடன் வாங்கி மக்களுக்கு பயனற்ற திட்டங்களை கொண்டு வந்து மக்களின் வரிப்பணத்தை ஊதாரி தனமாக செலவிடுவதை தடுக்க வேண்டும். கலைஞர் மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது. அதிமுகவின் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா?” என்றார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், சிவபதி ,அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.