ஈரோட்டில் பெரியார் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனது துறைக்கான மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், “வீட்டுமனைப் பட்டா அரசு கிராம நத்தம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான வழி கண்டறியப்பட்டுள்ளது. சட்டமன்றம் முடிந்தவுடன் சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பட்டா வழங்குவதற்கான துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். உங்கள் கோரிக்கைகளை அவர்களிடம் சொல்லுங்கள். அதில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து முடிப்போம்.
நரிக்குறவர் இருளர் சமூக மக்களில் 48 ஆயிரம் குடும்பத்தை கண்டுபிடித்துள்ளோம். அதில் 33 ஆயிரத்து 677 குடும்பங்களுக்கு பட்டா கொடுத்துள்ளோம். பட்டா கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வீடுகளையும் கட்டித்தர சொல்லியுள்ளோம். ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை. பெரியார் வீட்டிற்கே பட்டா இல்லை. 7 ஆயிரம் குடும்பங்கள் அப்படி உள்ளது. அவர்கள் அனைவருக்கும் இப்பொழுது கொடுக்க இருக்கிறோம். 10 வருடக்காலம் இத்துறையில் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். இப்பொழுது இத்துறையில் சீர்திருத்தம் செய்கிறோம்” என்றார்.