நேற்று மாலை, அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு சில வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, துறையூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திராகாந்தி, லால்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ராஜாராம் ஆகிய வேட்பாளர்களை மாற்றக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், அதிமுக தலைமை இன்று லால்குடி வேட்பாளர் ராஜாராமை நீக்கிவிட்டு, அந்த தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது.
தற்போது, அந்த லால்குடி தொகுதிக்கு அருகாமையில் உள்ள 'நகர்' என்ற பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். பஸ் ட்ரான்ஸ்போர்ட் வைத்து நடத்திவரும் இவர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் மிக நெருங்கிய நண்பர் என்பதால், இந்தத் தொகுதி, அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.