திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், வேலூர் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாணியம்பாடி டவுன், வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு, மிட்டூர், குருசிலாப்பட்டு, பூங்குளம், ஆலங்காயம், போன்ற பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், கடல் அலையே திரண்டு வந்திருப்பதுபோல் நீங்கள் அனைவரும் வந்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்க்கின்ற பொழுது நிச்சயமாக உறுதியாக நம்முடைய அணியின் சார்பில் 39-வது எம்.பி.யாக நம் வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு போகப் போகின்றார் என்பது உறுதி - உறுதி அதில் எந்த மாற்றமும் கிடையாது. நியாயமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலிலேயே கதிர் ஆனந்த் அவர்கள் வெற்றி பெற்று அவர் நாடாளுமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டு சதி செய்து சூழ்ச்சி வலையைப் பின்னி தி.மு.க.வின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ரெய்டு என்கின்ற ஒரு நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கழகத்தின் பொருளாளராக இருக்கக்கூடிய அண்ணன் துரை முருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஆனால், அந்த நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை. மக்கள் அதை நம்பவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால், 39 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் 38 இடங்களில் தி.மு.க அணி தான் வெற்றி பெற்றிருக்கின்றது அது ஒன்றே போதும். இப்பொழுது நான் உங்களிடம் கேட்கின்றேன் அதை நீங்கள் நம்புகிறீர்களா? எனவே, அந்த நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் தி.மு.கழகத்தின் மேல் வைத்த காரணத்தினால் தான், மிகப்பெரிய வெற்றி அடைந்தோம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால் தி.மு.கழகத்தின் சார்பில் நின்ற அத்துனை வேட்பாளர்களும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சத்தில் இருந்து ஐந்தரை லட்சம் வரை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை நம்முடைய தி.மு.க.விற்கு கிடைத்தது. அதுமட்டுமல்ல, நான் உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்தவிரும்புகின்றேன். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1.1 சதவிகித வாக்குவித்தியாசத்தில் நாம் நம்முடைய வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கின்றோம். ஆனால் மிகப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சியாக நாம் வீற்றிருக்கின்றோம். இவற்றையெல்லாம் விட 1971-ல் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட போது நாம் இடங்கள் 184 இடங்களில் வென்று வரலாற்று சாதனைகளைப் படைத்திருக்கின்றோம்.
அதுமட்டுமல்லாம, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய கட்சி வாரியாக பட்டியலைப் பார்த்தீர்கள் என்றால் நம்முடைய தி.மு.க.தான் மூன்றாவது இடத்தில் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய ஒரு கம்பீரத்தை பெற்றிருக்கின்றோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளின் வாக்கு விகிதாச்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால், இந்தியாவிலேயே தி.மு.க தான் அதிகமான வாக்கு விகிதாச்சாரத்தை பெற்ற ஒரேயொரு கட்சி என்று ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு புள்ளி விவரம் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றது. எனவே அந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கை வைத்து அந்த வெற்றியை தேடித் தந்தார்கள்.
எனவே, அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் வேலூர் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நாம் அந்தத் தேர்தலை சந்திக்கப் போகின்றோம். அப்படி சந்திக்கின்றார் நேரத்தில் நீங்கள் எல்லோரும் உதயசூரியன் சின்னத்தை ஆதரித்து, நம்முடைய வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்க வந்திருக்கின்றேன். நம் வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்ணன் துரைமுருகன் அவர்களின் அருமைப் புதல்வன் தான் நம்முடைய கதிர் ஆனந்த் அவர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
துரைமுருகன் அவர்கள் எப்படி இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு கலைஞருடைய அன்பு உடன்பிறப்புகளில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தம்பிமார்களில் ஒரு முக்கியமான தம்பியாக விளங்கியது பற்றி உங்களுக்குத் தெரியும். எப்படி சட்டமன்றத்தில் அதிக நாள் இருந்த பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டோ. அடுத்தற்கடுத்து அந்தப் பெருமை அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு தான் இருக்கின்றது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகின்றேன்.
அப்படிப்பட்ட அண்ணன் துரைமுருகன் அவர்களின் அருமைப் புதல்வன் தான் தம்பி கதிர் ஆனந்த் அவர்கள். இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லுகின்ற நேரத்தில், இந்தத் தொகுதியில் வாழக்கூடிய மலைவாழ் மக்கள் பயன்படக்கூடிய வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் - மின்சார வசதிகள் - சாலை வசதிகள் - கழிவுநீர் கால்வாய் சீரமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் முழுமையாக தீர்த்து வைக்கப்படும் என்பதை நான் உறுதியோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.
நகரப்பகுதிகளில் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் திட்டங்கள் அனைத்தும் நகரின் வெளிப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும். மேலும் திடக் கழிவுகளும் நகர்புறத்திற்கு வெளியில் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கக்கூடிய ‘நியூ டவுன் பிரிட்ஜ் கட்டுமானப்பணி’ சில அரசியல் தூண்டுதல்களின் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. நான் உறுதியோடு சொல்லுகின்றேன் நம்முடைய கதிர் ஆனந்த் அவர்கள் உங்களின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே அந்த கட்டுமானப் பணிக்கான செயல்களில் ஈடுபட்டு அதனை நிறைவேற்றுகின்ற முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்.
ஈ.எஸ்.ஐ மருத்துவமனை படுக்கை வசதிகளோடு அமைத்து தரப்படும். மைகொண்டா பகுதியில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சிப்காட் தொழில் பூங்கா கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 1972-ஆம் ஆண்டு அண்ணன் துரைமுருகன் அவர்கள் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை இந்த தொகுதிக்கு கொண்டு வந்தார். அதேபோல், மற்றுமொரு சிப்காட் தொழிற்பேட்டை நம்முடைய தொகுதிக்கு கதிர் ஆனந்த் அவர்கள் கொண்டு வந்து. அதனை, முழுமையாக நிறைவேற்றி வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவார்.
அதேபோல், இந்தத் தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மகளிர் கலைக் கல்லூரி இங்கே ஏற்படுத்தித் தரப்படும்.
அண்ணன் துரைமுருகன் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களுக்கு நிழலாக இருந்தவர் மட்டுமல்ல, வேலூர் மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கக்கூடிய பல மாவட்டங்களுக்கும் அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து என்னென்ன பணிகளெல்லாம் செய்திருக்கின்றார் என்று உங்கள் அனைவருக்கும் பட்டியலிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவற்றிற்கு நேரம் காணாது. அவ்வளவு பணிகளை அவர் செய்திருக்கின்றார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்தத் தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளது. தி.மு.கழகத்தின் ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறை முதலமைச்சராக இருந்தபொழுது நான் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த நேரத்தில்தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்ற நிலையில் அந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தோம். அதன்பிறகு அண்ணன் துரைமுருகன் அவர்கள் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி வேலூரில் இருக்கும் குடிநீர் பிரச்சினையை போக்கிட வேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞரிடத்தில் பலமுறை எடுத்துச் சொன்னார்கள். அதன் பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் அதற்கான நிதியை ஒதுக்கி அந்தத் திட்டத்தை நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த பொழுது இதே வேலுர் பகுதிக்கு வந்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன்.
80 சதவிகிதப் பணிகள் முடிவடையும் நிலையில், தேர்தல் வந்த காரணத்தினால் இந்தப் பணி தடைபட்டுப் போனது. அதன் பிறகு தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது. அப்படி ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க என்னசெய்ததென்றால், தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அண்ணன் துரைமுருகன் அவர்கள் குரல் கொடுத்து வந்த திட்டம் என்று எண்ணியிருக்கூடாது. இது மக்களுக்கான பிரச்சினை மக்களுக்கு சேரவேண்டிய குடிநீர். எனவே, அதை அவர்கள் விரைவுபடுத்தி அந்தத் திட்டத்தை செய்து முடித்திருந்தால். வேலூரில் இருக்கக்கூடிய அனைத்து கிராம பகுதிகளுக்கும் காவிரி நீர் நிச்சயமாகப் போய் சேர்ந்திருக்கும். ஆனால், ஓரவஞ்சனையுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டார்கள்.
மீண்டும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தி அனைத்து கிராம பகுதி மக்களுக்கும் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய கதிர் ஆனந்த் அவர்களை எம்.பி.யாக நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற பொழுது அந்தத் திட்டத்தை நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றக் காத்திருக்கின்றார்.
அதேபோல், முதியோர் உதவித்தொகை மற்றும் 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவைகள் எல்லாம் முறைப்படுத்தப்பட்டு முறையாக தகுதியுள்ள அத்துனை பேருக்கும் கட்சி பாகுபாடின்றி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை பொருத்தவரையில், 150 நாளாக உயர்த்தப்படும் என்று கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தோம். மேலும், வேலை செய்து உழைத்ததற்கான ஊதியத்தை உங்களைத் தேடிவந்து கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை கொடுத்திருந்தோம். ஆனால் இப்பொழுது பாதி நாட்கள் கூட வேலை வழங்க முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதேபோல், நீங்கள் அணியக்கூடிய தாலி செயின், தோடு, கம்மல், மூக்குத்தி போன்றவற்றை வங்கிகளில் அடமானம் வைத்திருக்கின்றீர்கள். அதனை மீட்க முடியாத ஒரு சூழ்நிலை, அவற்றிற்கு வட்டி கட்ட வேண்டும், வட்டி கட்ட முடியாத நிலையில் வட்டிக்கு வட்டி கட்ட வேண்டிய கொடுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொன்னோம் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீங்கள் அடமானம் வைத்திருக்கக்கூடிய அத்தனை நகைகளையும் வட்டியில்லாமல் மீண்டும் உங்களிடத்தில் ஒப்படைக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவோம் என்று உறுதி அளித்திருந்தோம்.
ஆனால், ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்பொழுது அ.தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்கள் என்றால் நடக்காத உறுதி மொழிகளை எல்லாம் தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள் மிட்டாய் கொடுத்து வாக்கு வாங்கி விட்டார்கள் என்று, நீங்கள் ஏதோ குழந்தைகள் போன்றும் மிட்டாய்க்கு ஏமாற்ந்து எங்களுக்கு ஓட்டு போட்டது போன்று ஒரு தவறான பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நான் கேட்கின்றேன் மக்களை ஏமாற்றியதால் 38 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நீங்கள் வென்ற ஒரே ஒரு இடத்தில் மிட்டாய் கொடுத்தீர்களா அல்லது அல்வா கொடுத்து அங்கிருக்கும் மக்களை ஏமாற்றினீர்களா? இதுதான் நான் கேட்கக்கூடிய கேள்வி. எனவே, இவற்றையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள் இவற்றிற்கெல்லாம் நீங்கள் சரியான பதில் தர வேண்டும்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் நம்முடைய வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள் வெற்றி பெறப்போகின்றார் உதயசூரியன் உதிக்கத் தான் போகின்றான். என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக - சான்றாக - சாட்சியமாக - இந்தக் கூட்டம் இன்றைக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இன்றைக்கு உங்களை நாங்கள் சந்திக்க வந்திருக்கின்றோம். அப்படி சந்திக்க வருகின்ற நேரத்தில் தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நாங்கள் எதிர்க்கட்சி தான். எதிர்க்கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய குளறுபடிகளை - அக்கிரமங்களை - அநியாயங்களை - ஊழல்களை - கலெக்சன் - கமிசன் - கரெப்சன் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அதே போல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செய்வோம் என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்வது எங்களின் வேலை. அதைத்தான் நான் நேற்றைய தினமும் என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லிக்கொண்டு வந்தேன். அதே போல் நம்முடைய வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களும் நம் வாக்காளர்களை சந்திக்கின்ற பொழுதும் அதைத்தான் உறுதியோடு தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றார்.
முதலமைச்சராக இருக்கக்கூடிய எடுபிடி பழனிசாமி ஏன் அப்படி சொல்கின்றேன் என்றால், கூனிக்குறுகி, அடிமையாக மத்திய அரசிடம் கை கட்டி நிற்பவர்களை எப்படி சொல்வது. எடுபிடி என்று தான் சொல்லவேண்டும் அதனால் அது தவறல்ல, எனவே எடுபிடியாக இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். நேற்றைக்கு அவருடைய பிரச்சாரப் பயணத்தை துவங்கி இருக்கின்றார். அது அவரின் ஜனநாயக உரிமை அதை அவர்கள் தொடர்ந்து செய்யட்டும்.
ஆனால், கடந்த 8 வருடமாக அ.தி.மு.க தான் ஆட்சியில் இருக்கின்றது. ஆட்சியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி எட்டு வருடமாக நாங்கள் இந்தந்த திட்டங்கள் செய்திருக்கின்றோம். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கின்றோம். பல சாதனைகளை செய்திருக்கின்றோம் என்று பட்டியல் போட்டு சொன்னால், நானும் அதை வரவேற்கக் காத்திருக்கிறேன். ஆனால், அவற்றையெல்லாம் சொல்லவில்லை. ஏனென்றால் அப்படி ஒன்றும் இல்லை “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” அதனால் அதைச் சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே, அதைப்பற்றி எல்லாம் சொல்லாமல், முதலமைச்சர் என்பதையே அவர் தரம் தாழ்த்திக் கொண்டு தேவையற்ற சில வார்த்தைகளை எல்லாம் அவர் பேசி இருக்கின்றார்.
அவர் சொல்லியிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அ.தி.மு.க ஆட்சியை அழிக்க முடியாது என்கிறார். நான் கனவு காண வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. விரைவில் அது நினைவாக நடக்கப் போகிறதா இல்லையா என்பதை மட்டும் பாருங்கள். இவ்வாறு கூறினார்.