வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை தாயகம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று (03.05.2020) பகல் 1:00 மணி அளவில் மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தமிழகத்தில் இருந்து UAE, துபாய், சவுதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் திரும்பி தாயகம் வர விரும்புவோரை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டேன். இது குறித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கரோனா ஊரடங்கு உத்தரவு முடியும் தருவாயில் இன்னும் ஒரு வாரம் - 10 நாட்களில் சாதகமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
நம் தாயகம் சார்ந்தோர் வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் அவரவர்கள் பணியாற்றும் அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் மூலமும் அந்தந்த நாட்டு அரசு மற்றும் நம் நாட்டு தூதரகங்கள் மூலம் உணவு மருந்து பாதுகாப்பு ஆகியன நம் மக்களுக்கு வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற என் வேண்டுகோளுக்கு இவை முழுவீச்சில் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், தூதரகங்கள் மூலம் மேலும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மத்திய கேபினட் அமைச்சராக இருந்தாலும் நிதானமாகவும் பொறுமையாகவும் என் வேண்டுகோளை கேட்டு அன்புடன் உரையாடிய ஜெய்சங்கருக்கு என் நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.