தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர்.
அப்போது, இவர்களை பொறுத்தவரை அடையாள மை. ஆனால் இந்த 'மை'யில் உள்ளுக்குள் இருப்பது ஒவ்வொரு வாக்காளரின் உரிமை. வாக்காளனின் உடைமை. வாக்காளன் ஆற்ற வேண்டிய கடமை. இத்தனை மை இங்கே இருக்கிறது. ஆனால் அளிக்க வேண்டிய வாக்கை அளிக்க வேண்டியவர்களுக்கு அளிக்காமல் இவர்கள் அளித்துவிட்டால் அது மடமை.
தன்னுடைய உரிமையை மறந்து, உடைமையை மறந்து, கடமையை மறந்து, வாய்மையை மறந்து, தூய்மையை மறந்து மடமையை மட்டும் நினைத்து வாக்களிக்கக்கூடிய சூழ்நிலை இருந்தால் இந்த நாடு எங்கே போகும். இந்த தேசத்தின் முக்கியமான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல். ஒவ்வொன்றும் முக்கியமான தேர்தல்தான். அதனால்தான் சட்டமன்றத் தேர்தல் பிரதானம், நாடாளுமன்றத் தேர்தலில் காட்டுவோம் நிதானம் என்றேன்.
என் கட்சிக்காரர்கள் கூட 21 தொகுதிகளில் நிற்கலாம் என முடிவு எடுக்கலாம் என்றார்கள். வேண்டாம் என்றேன். மாவட்டச் செயலாளர்களுடன் வடசென்னை, பெரம்பூரெல்லாம் போனோம். வேணாம் இந்த தேர்தல்.
நாங்கள் ஆரம்பக்கட்டத்தில் லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பாக கள்ளக்குறிச்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டேன். அந்த தேர்தலில் இறங்கி வேவை செய்தேன். அரசியலுக்கு சம்மந்தமே இல்லாத திரையுலகத்தில் இருக்கும் எனது மகன் சிலம்பரசன் பிரச்சாரம் செய்தார். டி.ராஜேந்தர் கடுமையாக வேலை செய்கிறார், இந்த அளவுக்கு யாரும் வேலை செய்தது இல்லை என்று சொன்னார்கள். ஆனால் தேர்தலில் பட்டனை அழுத்தினால் வேறு ஒரு சின்னத்திற்கு ஓட்டு விழுகிறது. அந்த சின்னத்தின் பெயரை சொல்ல மாட்டேன். அது அரசியல். இவ்வாறு கூறினார்.