கடந்த சில நாட்கள் முன்பு சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தமிழ்நாடு எனச் சொல்வதைவிடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனப் பேசியிருந்தார். இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்தனர். ட்விட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்ரண்டிங்கில் இருந்தது. தமிழகமா? தமிழ்நாடா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் பல சினிமா பிரபலங்களிடமும் கேட்டனர். ஏறத்தாழ அனைவரும் தமிழ்நாடு என்றே தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை மணலியில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்து நாடு. இது திராவிட மண் அல்ல. தமிழக போலீஸ், தமிழக முதலைச்சர் என்று இதற்கு முன்பு சொன்னதில்லையா. ஒரத்த நாடு, வல்ல நாடு என்பது போன்ற ஊர்கள் எல்லாம் இருக்கின்றது. அது தனி நாடு ஆகிவிடுமா.
நாங்கள் தமிழ்நாடு என்று சொன்னால் நீங்கள் திராவிட நாடு எனச் சொல்லுவீர்கள். நாங்கள் தமிழகம் எனச் சொன்னால் நீங்கள் தமிழ்நாடு எனச் சொல்லிவிட்டீர்கள் அல்லவா. இதுதான் எங்கள் ப்ளான்” எனக் கூறினார்.