Skip to main content

நான் தி.மு.க.வேட்பாளர் தான்...! -ம.தி.மு.க. ஈரோடு கணேசமூர்த்தி

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக மாநில பொருளாளர் கணேசமூர்த்தி இன்று தனது வேட்பு மனுவை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியாளருமான கதிரவனிடம் தாக்கல் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,  
 

ganeshamoorthy



"நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் நான் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இத்தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கோமதேக என கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.


இதில் எங்கள் கட்சியான மறுமலர்ச்சி திமுகவுக்கு ஈரோடு தொகுதி கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் இத்தொகுதியில் எங்கள் கட்சி என்னை வேட்பாளராக அறிவித்தது. ஏற்கனவே எங்கள் கட்சியின் சின்னமான பம்பரம் சின்னம் கிடைக்கும் என முயற்சி செய்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கவில்லை. இந்த நிலையில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். தற்போது மத்தியில் உள்ள பாஜக ஆட்சியும் மாநிலத்தில் உள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ் என்கிற அதிமுக கம்பெனி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 
 

மக்கள் விரோத ஆட்சியை  நடத்துகிற மோடி ஆட்சியை அப்புறப்படுத்தும் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கும் முடிவு வரும். இந்த அடிப்படையில்தான் மக்களிடம் திமுக கூட்டணி செல்கிறது. மக்கள் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றியடைய வைப்பார்கள். ஈரோடு தொகுதியை பொறுத்தவரை நான் திமுகவின் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறேன். மேலும் இப்போது நான் தி.மு.க. உறுப்பினர்தான்"என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்