கோவில்பட்டி தொகுதியில், அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான கடம்பூர் ராஜு, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம். கட்சியின் சீனிவாசன், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன், ம.நீ.ம.வின் கதிரவன், நாம் தமிழர் கட்சியின் கோமதி என பல அரசியல் கட்சிகளும் களத்திற்கு வந்தாலும் களமோ மும்முனைப் போட்டியில் பரபரத்துக் கிடக்கிறது.
அமைச்சர் கடம்பூர் ராஜுவைக் குறிவைத்து டி.டி.வி. கோதாவிற்கு வருவதால் கோவில்பட்டி வி.ஐ.பி. ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. 2,54,990 வாக்காளர்களைக் கொண்ட கோவில்பட்டி தொகுதி, மறு சீரமைப்பின்படி, ஓட்டப்பிடாரத்தில் வருகிற கயத்தாறு யூனியன், கழுகுமலைப் பேரூராட்சிகள் கோவில்பட்டித் தொகுதியோடு இணைக்கப்பட்டதால் தொகுதியின் வாக்கு வரிசையில் தேவர் சமூக வாக்குகள் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. மேலும் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியே அவர்களின் வாக்குகள் தான். எனவே நிச்சயம் கரையேறிவிடலாம் என்ற அ.ம.மு.க.வின் தென்மண்டலப் பொறுப்பாளர் மாணிக்க ராஜாவின் திட்டப்படி இங்கே குதித்திருக்கிறார் டி.டி.வி. இதன்மூலம் தனது அரசியல் எதிராளி அமைச்சர் கடம்பூர் ராஜுவை அரசியலில் டம்மியாக்குவது, தொகுதியை வசப்படுத்துவது ஒரே கல்லில் இரட்டை மாங்காய் அடித்திருக்கிறார் மாணிக்கராஜா.
கடந்த 2011லிருந்து 10 வருடமாகத் தொடர்ந்து எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளை வகிக்கும் கடம்பூர் ராஜூ தன்னுடைய காலத்தில் தொகுதியில் முக்கியப் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை. குறிப்பாக அரசின் ஜி.எஸ்.டி. வரிக் கொள்கையால் தொகுதியின் குடிசைத் தொழிலான தீப்பெட்டித் தொழில் நசித்துப் போனது. தாறுமாறாக ஏறிய மூலப் பொருட்கள். நீண்டகால குடிநீர்ப் பிரச்சனையில் இரண்டாம் பைப் லைன் திட்டம் முடிக்கப்படாமல் கிடப்பிலிருப்பது. வெள்ளநீர்க் கால்வாயை முறைப்படுத்தத் தவறியது. அத்துடன் மெயின் சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள் அப்புறப்படுத்தியது போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்ற அதிருப்தி பரவலாக இருக்கிறது என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். இந்த அதிருப்தி அமைச்சருக்குச் சறுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 தேர்தலின் போது இங்கே மோதிய தி.மு.க. வேட்பாளர் 462 என்ற சொற்ப வாக்கிலேயே வாய்ப்பைப் பறிகொடுக்க, ‘ஜெ’வின் குறுக்கீடு காரணமாக நூலிழையில் கரையேறினார் கடம்பூர் ராஜு. அதற்குக் காரணம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியான தொகுதியில் முதன்மையிலிருக்கும் தேவர் சமூக வாக்குகள். டி.டி.வி. தங்களது தேவர் சமூகம் சார்ந்தவர். தற்போதைய அ.தி.மு.க.வினால் சசிகலா ஓரங்கட்டப்பட்டார் என்ற எண்ணத்தில் தேவர் சமூக வாக்குகளில் பெரும்பாலும் மாணிக்கராஜாவின் ஊடுருவலால் இம்முறை குக்கர் பக்கம் திரும்பியிருக்கிறது. டி.டி.வி.க்காக தனது கயத்தாறு யூனியனையே வளைத்திருக்கிறார். இதனால், மேஜர் ஷேர் டி.டி.வி.க்குப் போக, இலை ஆதரவு வாக்குகளில் பெரும் சரிவு. அடுத்த சிறுபாதிப்பு சி.பி.எம். வேட்பாளரான சீனிவாசனுக்கு இதனை பேலன்ஸ் செய்ய அமைச்சர், தான் சார்ந்த நாயக்கர் சமூக வாக்குகளை நம்பவேண்டிய நிலை. ஆனால் அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் அமைச்சருக்குப் போனது இம்முறை இரண்டாகப் பிரிந்து அமைச்சருக்கும், குற்றச்சாட்டில்லாத எளிமையான தி.மு.க.வின் கூட்டணியான சி.பி.எம். வேட்பாளரும், நாயக்கர சமூகம் சார்ந்தவரான சீனிவாசனுக்குப் போகிறது. அத்துடன் இழப்பைச் சரிக்கட்ட சி.பி.எம். வேட்பாளருக்குக் கோவில்பட்டி நகர மற்றும் கிராமப்பகுதி விவசாய, தீப்பெட்டித் தொழிலாளர்களின் வாக்குகளும் கை கொடுக்கின்றன.
அமைச்சர், டி.டி.வி. தினகரன் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் பணம் உள்ளிட்ட பலத்தோடு கோதாவிலிருக்கும் போது, அந்த பலமில்லாமல் திணறும் சி.பி.எம். வேட்பாளருக்கு தி.மு.க உதவ, தற்போது தெம்பிலிருக்கிறாராம் வேட்பாளர் சீனிவாசன். மேலும், தொடர்ந்து பல ஆண்டுகளாக சி.பி.எம்.மின் அடிமட்டத்திலிருந்து நகரச் செயலாளராக உயர்ந்த சீனிவாசன் அரசியலில் அமைச்சருக்கும் சீனியர். தொகுதி மக்கள் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு மக்களுக்கு உதவிய பாப்புலரான புள்ளி என்பதால் அடித்தட்டு நடுத்தர வர்க்கப்பிரிவு மக்களிடையே செல்வாக்கானவர் என்பது சீனிவாசனுக்குப் பலம். ஆனாலும் வெற்றிக் கோட்டை நெருங்க கூட்டணியான தி.மு.க.வினரை எதிர்பார்க்கும் சூழலிலிருக்கிற சி.பி.எம். வேட்பாளருக்கு தி.மு.க.வினரின் ஒத்துழைப்பும் அசையாமலிருக்கும் அதன் வாக்குவங்கியும் உதவுகின்றன. மேலிடம் கொடுத்த நெருக்கடியால் களத்தில் தீவிரமாகியிருக்கிறார்கள் தி.மு.க.வினர்.
கைகொடுத்த வாக்குகள் கூறு போடப்பட்டது. விலைவாசி ஏற்றம், இட உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அதிருப்தி. தொகுதியின் ஜீவாதாரத் தொழிலுக்கு உதவாதது போன்றவைகள் அமைச்சருக்கெதிராக மலைபோல் நிற்கின்றன. எனவே சரிவைச் சமாளிக்கப் போராடுகிறார். அடுத்து தான்சார்ந்த சமூக வாக்குகளை மேக்சிமம் அறுவடை செய்த டி.டி.வி.யின் வெற்றிக்காக தொகுதியின் பிற மக்களின் வாக்குகளைக் கவரவேண்டிய நிலை. எனவே களநிலவரத்தை மாற்றக் கடைசிக்கட்டமாக பலமான வைட்டமின்களைப் புகுத்தும் தீவிரத்திலிருக்கிறது, குக்கரும் இலைத்தரப்பும்.
இந்த நிலையில் இலை வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு, கடந்த 21ஆம் தேதியன்று மந்தித் தோப்புசாலை அன்னை தெரசா நகரில் தேர்தல் பரப்புரையிலிருந்திருக்கிறார். அது சமயம் அ.ம.மு.க.வின் தென்மண்டலப் பொறுப்பாளரான மாணிக்கராஜா தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கடம்பூர் ராஜூ மலேசியாவில் ஹோட்டல் வாங்கியுள்ளார். அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால் அமெரிக்காவில் ஹோட்டல் வாங்குவார், என்று பரப்புரை செய்ததோடு ஆத்திரம் மூட்டும் வகையில் அவர் ஊரில் இருக்கமாட்டார் என்றும் மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க.வின் ‘ஜெ’ பேரவை செயலர் பழனிகுமார் கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்ய, அதன் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அ.ம.மு.க.வின் தென்மண்டலப் பொறுப்பாளரும் தேர்தல் பிரிவுச் செயலாளருமான மாணிக்க ராஜாவின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அடிப்படையில் தொழிலாள வர்க்கம் நிறைந்த கோவில்பட்டியிலிருக்கும் கம்யூனிஸ்ட்களின் பலம், கூட்டணி தி.மு.க. காங்கிரசின் பலமும் சி.பி.எம். வேட்பாளருக்கு வலுசேர்க்கிறது. தற்போதைய நிலவரப்படி முக்கோண மோதலில் இருக்கிறது கோவில்பட்டிக்களம்.