அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர். அதேபோல், வரும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இதில், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத் தேர்தலை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திக்க வேண்டும். தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையேற்கட்டும். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா. எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.
அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர். இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான்” எனத் தெரிவித்துள்ளார்.