தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் கே. எஸ் அழகிரி கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தநிலையில் கரோனா காலத்தில் சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிதம்பரம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உள்ளோம் என அழகிரியிடம் தெரிவித்தனர்.
இதற்கு அழகிரி 27ந் தேதி கடலூரில் இருந்து நாகப்பட்டினம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஒவ்வொரு இடத்திலும் 500 பேருக்கும் குறையாமல் சமூக இடைவெளி இல்லாமல் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த சட்டத்தில் அனுமதி உள்ளது. ஏன் அவரை கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. பழனிசாமிக்கு ஒரு சட்டம், அழகிரிக்கு ஒரு சட்டமா? என காட்டமாக பேசினார். கைது ஆகமுடியாது. வலுக்கட்டாயமாக வன்முறையை பிரயோகித்து எங்களை கைது செய்து கொள்ளுங்கள். என காவல்துறையிடம் பேசியதால் காவல்துறையினருக்கும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை. இந்த நிலையில் கரோனா காலத்தில் அதிக கூட்டத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் காங் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.