ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''முதலில் பாஜக தெளிவாக யாருக்கு அவர்களுடைய ஆதரவு என்பதை முடிவு செய்து கொள்ளவேண்டும். அதுவே ரொம்ப நாளாக குழப்பமாக இருந்தது. அப்படிப்பட்டவர்களின் ஆதரவுடன் நிச்சயமாக எந்த பயனையும் அளிக்கப் போவதில்லை.
அது மட்டுமல்லாமல் ஒன்றிய அரசாங்கம் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிரான பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்களுக்கு அவர்கள் யாரு என்று தெளிவாகத் தெரிகிறது. நிச்சயமாக அவர்கள் ஆதரவில் இருக்கக்கூடிய யாருக்கும் மக்கள் ஓட்டு போட தயாராக இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க கூடிய திராவிட முன்னேற்றக் கழக கழகத்திற்கு ஆதரவு அளித்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்கு தான் நிச்சயமாக வெற்றி வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.