திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் எதிரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அதிமுக வேட்பாளர் கருப்பையா அனைவரையும் வரவேற்றார்.
திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன்,அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக ப.கருப்பையா அறிவித்த நாள் முதல் தற்போது வரை ஜெட் வேகத்தில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக ஊரெல்லாம் ஒரே பேச்சு கருப்பையா இரட்டை இலை சின்னத்தில் மகத்தான வெற்றியை பெறுவார் என்ற செய்தி திருச்சி தொகுதி முழுவதும் சென்றடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
எந்தப் பணியிலும் தொய்வில்லாமல் திருச்சியின் குரலாக நாடாளுமன்றத்தில் கருப்பையாவின் குரல் ஓங்கி ஒலிப்பதற்காக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதன் காரணமாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அது எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையும் தருகிறது. நிச்சயம் அவர் நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
திருச்சியினுடைய ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றத்தில் துடிப்புமிக்க இளைஞனுடைய குரலாக ஒலிக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரத்தத்தில் ஊறிய எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை .மூன்றாண்டு காலம் இவர்களுடைய ஆட்சியில் மக்களிடையே மிகப்பெரிய வெறுப்பும், அதிருப்தியும் இருக்கிறது.
பாஜகவோடு கூட்டணியில் இருந்த போதே நீதிமன்றம் மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தனித்தன்மையுடன் கொள்கையோடு இருக்கும். தொடர்ந்து நீங்கள் அதைப் பார்க்கப் போகிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி எதற்கும் துணிந்தவர். 100 சதவீதம் பாஜகவை நாங்கள் எதிர்க்கிறோம். அதை தெளிவாக எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்திவிட்டார். நாங்கள் அமைத்துள்ள கூட்டணியின் மூலம் மகத்தான வெற்றியைப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.