கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கடந்த 10 நாட்களுக்குப் பிறகு நேற்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் காணாமல் போனதாக இபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அதிமுகவின் கொள்கைப்பரப்புச் செயலாளராக இருந்தபொழுது வழங்கப்பட்ட செங்கோல் அதேபோல் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களைக் காணவில்லை என அலுவலக மேலாளர் மகாலிங்கம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, ''மகாலிங்கம் என்றாலே நீங்கள் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அப்படியே ஒரு ஊமை விழிகள் குனிஞ்சுகிட்டே இருப்பார். பண்றது எல்லாம் பயங்கரமான வேலைகள். இவரெல்லாம் போய் இதைக் காணும் அதை காணும்னு சொல்லக்கூடாது. என் வீட்டில் புகுந்து நான் எடுக்கணுமா? அது அவருடைய சொந்த ஆபீஸ், சொந்த கட்சி, இன்னைக்கும் ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர். நீங்க ஆயிரம் பேரைக் கையில் வைத்துக்கொண்டு பேசலாம். ஆனால் அவர்தான் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர். தொண்டர்கள்தான் ஓட்டு போட்டு முடிவெடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. அந்தத் தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தத் தீர்ப்பில் இருக்கின்ற தவறுகளை எல்லாம் எடுத்துச் சென்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. அங்கே பார்த்துக் கொள்வோம்.
எல்லார் மேலயும் ரெய்டு போகுது. சிபிஐ போகுது. ஜெயில்ல இருந்து கட்சி நடத்துவீங்களா? கம்பி எண்ணிட்டு கட்சி நடத்துவீங்களா பழனிசாமி. உங்களுக்கு ஜால்ரா அடிப்பார்களா அங்குள்ள லீடர்ஸ்கள் எல்லாம். இந்த கட்சி சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று சொன்னால் ஓபிஎஸ் தான் இந்த சுதந்திர பூமியில் தலைவராக நடத்திச் செல்ல முடியும். ஜெயில்ல உட்கார்ந்து கொண்டு கட்சியும் நடத்த முடியாது. போயஸ் இல்லத்தை அரசு இல்லமாக மாற்றுவது தொடர்பான கேஸ் சி.வி.சண்முகம் தான் ரொம்ப நிதானமாக கொண்டு போய் கோட்ட விட்டார். அது தீபா தீபக்கிற்கு போயிடுச்சு. அடுத்து சுப்ரீம் கோர்ட்ல போயிட்டு கோட்டவிடுவார் பாருங்க. அவருடைய ஆத்திரமும், அவருடைய செயல் இழப்பும், அவருடைய நிதானமற்ற தன்மையும் தான் எங்களுக்கு ஏற்படுகின்ற வெற்றி. கவலையே இல்லை போயஸ் கார்டன் தீர்ப்பு மாதிரி தான் இந்தத் தீர்ப்பும் வரும். இதில் எந்தச் சோர்வும் இல்லை. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. ஆகவே தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழக முழுவதும் ஓபிஎஸ் அலை வீசுகிறது. மக்கள் ஆதரிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒரு தேர்தல் வந்தால் தெரிந்து விடும் எடப்பாடி பழனிசாமி யோகிதை. பேசட்டும்... பேசட்டும்... எவ்வளவு நாள் பேசுறாங்கன்னு பார்ப்போம்'' என்றார்.